Headlines News :
Home » » மு.வரதராசன்

மு.வரதராசன்

Written By Unknown on Tuesday, July 15, 2014 | 9:16 AM

எதிர்காலம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களை, பேராசிரியர்களை, துணை வேந்தர்களைப் பெறலாம். ஆனால் மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கை உறுதியும் கொண்ட ஒரு பண்பாளர் – அறிவுத் தந்தையாய், அன்புள்ள தாயாய்ப் பலருக்கு விளங்கிய ஒரு நல்ல மனிதரை – இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு, அளவோடு நெறி வகுத்து, வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை எதிர்காலத்தில் இனி பார்க்க முடியுமா? (மு.வ.நூல்களைத் திறனாய்வு செய்தவரும், அவரது மாணவருமான இரா. மோகன்)
மு.வரதராசன், வட ஆற்காடு திருப்பத்தூர் தாலுகா வேலம் என்ற கிராமத்தில் திரு. முனுசாமி முதலியாருக்கும் அம்மாக்கண்ணு அவர்களுக்கும், 1912ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தவர். பிறப்பின் போது இவருக்கு இடப்பட்ட பெயர் திருவேங்கடம், ஆனால் காலப்போக்கில் வரதராசன் என்ற பெயரே நிலைத்தது. இளமையில் ஆதாரக் கல்வியை கிராமத்திலும், உயர் நிலைக் கல்வியை அருகிலுள்ள திருப்பத்தூரிலும் 1928ல் முடித்தார்.
இவர் தமிழ் பயின்றது முருகையா முதலியார் என்பவரிடம். உயர் நிலைக் கல்வி முடிந்ததும், சில காலம் திருப்பத்தூர் தாலுகா காரியாலயத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.
பின்னர் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தவர் தமிழ் வித்துவான் முதல் நிலைப் படிப்பை 1931ல் முடித்து மேல் நிலைப் படிப்பை 1935ல் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசும் பெற்றார்.
அதே வருடம் மு.வ. தனது மாமன் மகள் ராதா அம்மாளை மணந்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று மகன்கள் உண்டு.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக 1939ம் ஆண்டு சேர்ந்தவர் தொடர்ந்து 1961ம் வருடம் வரை அங்கு பணி புரிந்தார். பணியிலிருந்தவாறே தமிழ்க் கல்வியைத் தொடர்ந்த மு.வ. 1939ல் பி.ஓ.எல். பட்டத்தையும், தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தனது ஆய்வின் மூலம் 1944ல் எம்.ஓ.எல்.பட்டமும் பெற்றார். மேலும் தமது தமிழாராய்ச்சியைத் தொடர்ந்து 1948ல், சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற படைப்பில் முனைவரானார்.
பச்சையப்பன் கல்லூரிப் பணியை விட்டுவிட்டு, மு.வ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 1961ம் ஆண்டு சேர்ந்தார். இப்பணியிலேயே தொடர்ந்த மு.வ. 1971ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவியேற்றார். 1972ம் வருடம் அமெரிக்காவிலுள்ள வூஸ்டர் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியப் பேரறிஞர்( D.Litt) என்ற பட்டத்தையளித்துக் கௌரவித்தது.
டாக்டர் மு.வரதராசனார் 1974ம் வருடம், அக்டோபர் மாதம் 10ம் தேதி காலமானார்.
நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் இவரது படைப்புகள். இவர் எழுதிய அகல் விளக்கு என்ற நாவலுக்கு 1963ல் சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. கள்ளோ காவியமோ என்ற இவரது நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. இவரது படைப்புகளின் விவரங்கள் கீழே:
நாவல்கள்
1. கள்ளோ காவியமோ?
2. கரித்துண்டு
3. பெற்ற மனம்
4. நெஞ்சில் ஒரு முள்
5. அகல்விளக்கு
6. மண் குடிசை
7. செந்தாமரை (மு.வ. தானே பதிப்பித்தது)
8. பாவை
9. அந்த நாள்
10. அல்லி
11. கயமை
12. வாடா மலர்

சிறுகதைத் தொகுதி 
1. விடுதலையா?
2. குறட்டை ஒலி

வாழ்க்கை வரலாறு
1. அறிஞர் பெர்னார்ட் ஷா
2. மகாத்மா காந்தி
3. ரவீந்திரநாத் தாகூர்
4. திரு.வி.க.

சிறுவர் இலக்கியம்
1. குழந்தைப் பாட்டுகள்
2. இளைஞர்களுக்கான இனிய கதைகள்
3. படியாதவர் படும் பாடு
4. கண்ணுடைய வாழ்வு

கட்டுரைகள்
1. அறமும் அரசியலும்
2. அரசியல் அலைகள்
3. பெண்மை வாழ்க
4. போர்
5. உலகப் பேரேடு
6. மொழிப் பற்று
7. நாட்டுப் பற்று
8. மண்ணின் மதிப்பு
9. கி.ப். 2000
10. பழியும் பாவமும்

இலக்கியம்
1. திருக்குறள் தெளிவுரை(முதற் பதிப்பு 1949, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன – என்னிடமிருப்பது 1987ல் வெளியான 78வது பதிப்பு)
2. தமிழ் நெஞ்சம்
3. தமிழ் இலக்கிய வரலாறு
4. வாழ்க்கை விளக்கம்
5. ஓவச்செய்தி
6. கண்ணகி
7. மாதவி
8. இலக்கிய ஆராய்ச்சி
9. கொங்கு தேர் வாழ்க்கை
10. சங்க இலக்கியத்தில் இயற்கை
11. இலக்கியத் திறன்
12. இலக்கிய மரபு
13. முல்லைத்திணை
14. நெடுந்தொகை விருந்து
15. குறுந்தொகை விருந்து
16. நற்றிணை விருந்து
17. நடை வண்டி
18. புலவர் கண்ணீர்
19. இளங்கோ அடிகள்
20. இலக்கியக் காட்சிகள்
21. குறள் காட்டும் காதலர்
22. மொழி நூல்
23. மொழியின் கதை
24. மொழி வரலாறு
25. மொழியியற் கட்டுரைகள்

தகவல் ஆதாரம்:
1. புக்ஸ் கூகிள் வலைத்தளம்
3. திண்ணை வலைத்தளத்தில் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் கட்டுரை
4. புகைப்படம் சுட்டது திருக்குறள் தெளிவுரை 1987

ஆர்வி: மு.வ. ஐம்பதுகளின் லட்சியங்களை, மன ஓட்டங்களை, சிந்தனைகளை தன புனைவுகளில் பிரதிபலித்தவர். அந்த காலத்தில் ஒரு சூப்பர்ஸ்டார் என்றே சொல்ல வேண்டும். அவரது நாவல்கள் ஒன்றிரண்டை படித்திருக்கிறேன், எதுவும் ஞாபகம் இல்லை. ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி அவர் எழுதவில்லை.

அவரது திருக்குறள் தெளிவுரை மிக புகழ் பெற்றது. அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட தமிழ் பிரியர்களிடம் இந்த நூல் கட்டாயமாக இருக்கும். நூறு பதிப்புகளுக்கு மேல் வந்திருக்கிறது என்று சேதுராமன் குறிப்பிடுகிறார்.
அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு புகழ் பெற்றது. பட்டப் படிப்பில் பாடப் புத்தகமாக இருந்தது என்று நினைவு. எப்போ பார்த்தாலும் அவர் எழுதியகரித்துண்டு, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு ஆகியவற்றை பாடமாக வைப்பார்கள்.
அவர் எழுதிய மொழி நூல் எனக்கு மிக பிடித்த ஒன்று. மொழி எப்படி உருவாகிறது என்று எல்லாருக்கும் புரியும் வகையில் அருமையாக எழுதி இருப்பார். படியுங்கள் என்று எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.
அவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆவது நல்ல விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதுதான் சரியான நேரமும் கூட. ஒரு நாற்பது ஐம்பது வருஷங்கள் போனால்தான் ஒரு எழுத்தாளரின் பங்களிப்பு என்ன என்று சரியாக உணர முடியும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

MEDICAL Ad


நாட்காட்டி

வரலாற்றில் இன்று.......

மொத்த பக்கப் பார்வையாளர்கள்

இத்தளம் பற்றி உமது கருத்து

அதிகம் பார்க்கப்பட்டவைகள்

தற்போது பார்த்துக் கொண்டிருப்பவர்கள்