கவிஞர் இ.முருகையன் (ஒரு சிறு குறிப்பு, 23.04.1935-27.06.2009)
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலில் 1935 ஆம் ஆண்டில் பிறந்த முருகையன் ஒரு நாடகாசிரியர்,மொழிபெயர்ப்பாளர்,திறனாய்வாளர்,யாவற்றுக்கும் மகுடமிட்டால்போல ஒரு தலை சிறந்த கவிஞர் .குலோத்துங்கன் (பேராசிரியர் வ.சி.குழந்தைசாமி), கவிஞர் சி.சிவசேகரம் (இயந்திரப் பொறியியல் பேராசிரியர்) போல இவரும் விஞ்ஞானத் துறை பட்டதாரி.அதனாற்றானோ என்னவோ இவரின் கவிதைகளும் உணர்வு பூர்வமானவை மட்டுமல்ல,அறிவைத் தூண்டுபவன.
யாழ்ப்பாணம இந்துக்கல்லூரி பழைய மாணவரான இவரின் இளவலான சிவானந்தனும் ஒரு விஞ்ஞான பட்டதாரி,கவிஞர்,நாடகாசிரியர்,மொழிபெயர்ப்பாளர் அதுமட்டுமல்லாமல் ஒரு நல்ல நடிகர்.கல்லூரியில் எனக்குச் சற்று முந்தவையர்.பின்னர் கொழும்பில் 'நாடோடிகள்' கலை இலக்கியக் குழு மூலம் கவிஞர் மகாகவியின் 'கோடை' எனது நாடகமான 'இவர்களுக்கு வேடிக்கை' (Tarcisius இன் நெறியாள்கையில்) போன்ற நாடகங்கள் மேடையேறிய அதே காலகட்டத்தில் 'எங்கள் குழு' மூலம் இ.சிவானந்தனின் 'விடிவை நோக்கி' நாடகமும், 'கூத்தாடிகள்' மூலம் நா.சுந்தரலிங்கத்தின் (இவரும் ஒரு விஞ்ஞான பட்டதாரியே) 'அபசுரமும்', சற்றுப் பின்னர் இ.முருகையனின் 'கடூழியம்'. 'வெறியாட்டு' போன்ற நாடகங்களும் மேடையேற்றப் பட்டன.அது தமிழ் நாடகங்களின் ஒரு பொற்காலம் எனலாம்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மற்றுமொரு புகழ் பூத்த மகனான பேராசிரியர் கைலாசபதியுடன் சேர்ந்து 'கவிதை நயம்' என்ற நூலையும் முருகையன் எழுதியிருந்தார். மகாகவியின் (உருத்திரமூர்த்தி) சமகாலத்தவரான அவர் அவருடன் இணைந்து 'தகனம்' என்ற காவிய நூலையும் எழுதியுள்ளார். .
முருகையன் எழுதிய நூற்கள் எண்ணிலடங்கா. கலை கலைக்காகவே என்றில்லாமல் சமூக மேம்பாட்டு உணர்வுடன் கலை படைத்தவர் அவர். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர்.பழகுவதற்கு இனியவர்.அவரின் ஒரு சில படைப்புக்கள் (முழுவதுமல்ல):
கவிதை நூல்கள்
ஒரு வரம் - 1964
நெடும் பகல் -1967
நாங்கள் மனிதர்-1992
ஒவ்வொரு புல்லும் பிள்ளையும்- 2001
கோபுர வாசல்- 1969
வெறியாட்டு-1989(மேற் குறிப்பிடப்பட்டது)
சங்கடங்கள்-2000
உண்மை (மொழிபெயர்ப்பு)- 2002
மேடை நாடகங்கள்
கடூழியம்
திறனாய்வு நூல்கள்
ஒரு சில விதி செய்வோம்
இன்றைய இலக்கிய உலகம்
கவிதை நயம் (மேற் குறிப்பிடப்பட்டது)
இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் முது கலைமாணிப் பட்டத்தினையும் பெற்றதோடு அதே பல்கலைககழகத்தினால் முனைவர் பட்டம் வழங்க்கப்பட்டு கவ்ரவிக்கப்பட்டவர்.
27.06.2009 அன்று மறைந்த இப்பெரும் கவிஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !