‘புதுக்கவிதையின் தந்தை’ எனக் கூறப்படும் பிச்சமூர்த்தி, கும்பகோணத்தில் 1900 ஆம் ஆண்டு பிறந்தவர். வேங்கட ராமலிங்கம் எனப் பெயரிட்டிருந்தாலும் வீட்டில் அழைத்த ‘பிச்சை’ எனும் பெயரே ‘பிச்சமூர்த்தி’யாக நிலைத்தது. கும்பகோணம் கல்லூரியில் தத்துவத்தில் பட்டம் பெற்ற பின் சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1939 முதல் 1956 வரை இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சிறிது காலம் ‘ஹனுமான்’ இதழிலும் ‘நவ இந்தியா’ இதழிலும் பணியாற்றினார். 1934 முதலே ‘மணிக்கொடி’ இதழில் கவிதைகளும் கதைகளும் எழுதத் தொடங்கினார். வ. ரா. இயக்கிய ‘ஸ்ரீ ராமானுஜர்’ எனும் திரைப்படத்தில் நடித்த அனுபவமும், மேடைகளில் பாரதி பாடல்களைப் பாடிய அனுபவமும் பிச்சமூர்த்திக்கு உண்டு. சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ இதழைத் தொடங்கிய போது அதன் மனச்சாட்சியாக விளங்கினார். 1976 ஆம் ஆண்டு மறைந்தார்.
1922 இல் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியவர் பாரதியின் கண்ணன் பாட்டு கவிதைகளைப் படித்த பின் தமிழில் எழுதத் தொடங்கினார். ‘காதல்’ எனும் அவரது முதல் கவிதை 1934 இல் மணிக்கொடியில் வெளியாயிற்று. அவரது முதல் கதை ‘முள்ளும் ரோஜாவும்’ ‘கலைமகள்’ போட்டியில் முதல் பரிசு பெற்றது. மணிக்கொடி, சுதேச மித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி ஆண்டு மலர் போன்ற இதழ்களில் கதைகள் எழுதினார். 127 கதைகள், 83 கவிதைகள், 11 ஓரங்க நாடகங்கள், பல கட்டுரைகள் என அவரது படைப்புலகம் பலவகையினும் விரிவு கொண்டது. ‘குயிலின் சுருதி’, ‘காட்டுவாத்து’, ‘வழித்துணை’ என மூன்று தொகுதிகளாக வெளிவந்த கவிதைகளை மொத்தத் தொகுப்பாக முதலில் சி. சு. செல்லப்பா வெளியிட்டார். பின்னர் ‘மதி நிலையம்’ எனும் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக ஏற்கப்படும் ந.பிச்சமூர்த்தியை நம் பாடப்பகுதியில் கவிஞராக மட்டும் ஆழ்ந்து காணவிருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டுக்கும் அதற்குப்பின் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கும் உரிய தமிழ்க்கவிதைக்குத் திறமான அடித்தளம் பாரதியே என்பதை நாம் அறிவோம். அவ்வகையில் புதுக்கவிதைக்கும் பாரதியே மூல முன்னோடி. இதனைப் பிச்சமூர்த்தியின் சொற்களிலேயே காணலாம். சி. சு. செல்லப்பா 1975 இல் தொகுத்து வெளியிட்ட எழுத்து பிரசுர வெளியீடான ‘பிச்சமூர்த்தி கவிதைகள்’ தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில், பிச்சமூர்த்தி தம் புதுக்கவிதை முயற்சியின் தொடக்கத்தை விவரித்திருக்கிறார். "என் புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே காணாத அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப்படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் தெரிந்தது. தொடர்ந்து பாரதியின் வசன கவிதையைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக 1934 முதல் சோதனை ரீதியான கவிதைகள் எழுதத் தொடங்கினேன்." (பிச்சமூர்த்தி கவிதைகள், முன்னுரை)
ந. பி. கவிதையின் இயல்புகள்
தத்துவம் பயின்றவர் ந. பி. ஹரிகதை நிகழ்த்தியவர் அவர் தந்தை. இந்த வகையில் இயல்பாகவே அமைந்த ஒரு தத்துவச் சாய்வுள்ள மனம் கொண்டிருந்தார் பிச்சமூர்த்தி. பாரதியின் ‘காட்சி’ வசன கவிதைகள் ஏற்படுத்திய தாக்கமும் சேர்ந்து கொண்டது. அதனால் அவர் கவிதைகளில் மரபு நெறிகளின் மீது ஈடுபாடு, தார்மிக நோக்கு, இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பு, மதிப்பீடுகளைப் பேணுவதில் அக்கறை, பாரதி வழியில் வாழ்வின் மீதான தீவிரமான நம்பிக்கை ஆகியவற்றைக் காணலாம். அதே நேரம் நிகழ்கால வாழ்வின் நடப்புகளிலும் அவர் கவிதைகள் படர்ந்து பரவின. "பழைமைக்கும் நவீனத்துவத்துக்குமான ஒரு இணைப்புப்பாலம் பிச்சமூர்த்தி. நல்ல திடமான, சுத்தமான பாலம் . . . வயது ஏற ஏறப் படைப்பில் இளமை. லட்சியத்திலிருந்து நிதர்சனத்துக்கு, மரபு சார்ந்த மயக்கத்திலிருந்து புதுமைக்கு முன்னேறினார் . . . . ‘மயில் இறகு போடாது. நவபாரதம் பிறக்க தூக்கு மரம் தேவை’ எனத் தீவிரமாக எழுதுமளவுக்கு முன்னேறினார்" என்று சுந்தர ராமசாமி எடுத்துக் காட்டுகிறார். (ந.பிச்சமூர்த்தியின் கலை, மரபும் மனித நேயமும், பக். 13-15) பிச்சமூர்த்தி தம்மை ‘ஆன்மிகப் பொதுவுடைமையாளர்’ எனச் சொல்லிக் கொண்டதுண்டு. வான் மீது காதல், மண் மீது கால்.
கவிதையின் வடிவத்தைப் பொறுத்தவரை பிச்சமூர்த்தி வால்ட் விட்மன், பாரதி ஆகியோரின் வசன கவிதைகளால் உந்துதல் பெற்றாலும் தொடக்க காலத்தில் யாப்புச் சந்தத்தை முற்றிலும் துறந்துவிடவில்லை. ஆசிரிய விருத்தம், கலிவெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் சந்த அமைப்புகள் சில பிறழ்வுகளுடன் அவர் கவிதைகளில் காணப்பட்டன. காலப் போக்கில் யாப்பைத் துறந்த வசன கவிதைகளை அவர் படைத்தார். புதுக்கவிதை பற்றிய இன்றைய வளர்ந்தமைந்த கருத்துகளின் அடிப்படையில் ந. பி. யின் கவிதைகளை அணுகுவோர் ‘அவை வசன கவிதைகளே, புதுக்கவிதைகள் அல்ல’ என்ற முடிவுக்கு வருவதும் உண்டு. கவிதையில் முதன்முதலாகச் சோதனை முயற்சியில் இறங்கியவர் என்பதையும் அவர் தொடங்கிய காலம் புதிய முயற்சிகளுக்கு வரவேற்பளிக்காத காலம் என்பதையும் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும். அவர் தொடங்கி வைத்த முயற்சி பின்னர்க் காலப் போக்கில் பல்வேறு படிநிலை வளர்ச்சிகளைக் கண்டு, உருவத்திலும் உள்ளடக்கத்திலும் செறிவு, தெளிவு, ஆழம் கண்டு இன்றைய புதுக்கவிதையாகத் தோற்றம் தருகிறது. இவற்றை உள்ளிட்டுச் சிந்திக்கும் போது ந. பி. யைப் புதுக்கவிதையின் தந்தை என அழைப்பதில் தவறில்லை என உணரலாம். கவிதைப் படைப்பின் மூலம் தமது பிந்தைய தலைமுறைகளுக்கு வழிகாட்டியதுடன், புதுக்கவிதை பற்றிய தம் கருத்தோட்டங்களைத் தம் கட்டுரைகளில் விரிவாக எழுதியும் வழிகாட்டியிருக்கிறார் பிச்சமூர்த்தி. ‘தமிழ்க்கவிதை - சில சிந்தனைகள்’, ‘வசன கவிதை’, ‘தற்காலத் தமிழ்க்கவிகள்’, ‘மகாகவி பாரதியின் வசன கவிதைகள்’ போன்ற கட்டுரைகளும் தம் கவிதைத் தொகுப்புகளில் அவர் எழுதியுள்ள முன்னுரைகளும் புதுக்கவிதை பற்றி விரிவாகப் பேசுவன. (ந.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சாகித்திய அக்காதெமி, புதுதில்லி, 2002, ப.59)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !